Archive for May, 2010

h1

நேர்க்காணல்…கடவுளுடன்

May 29, 2010

தொகுப்பாளர்: அனைவருக்கும் வணக்கம். இன்னிக்கி ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சில யாருமே எதிர்பாக்காத ஒரு பிரமுகர சந்திக்க போறோம். துன்பம் இன்பம் ரெண்டுத்துக்குமே இவர் தான் காரணம்னு நம்பறோம்; உலகத்துல நடக்குற அநீதிக்கெல்லாம் இவர் தான் தீர்வு காணனும்னு ஏங்கறோம். மதம் என்ற சொல்லால் பிரிந்திருக்கும் மக்கள் இடையே அல்லா என்றும் இயேசு என்றும் சிவன் என்றும் இவருக்கு பெயர்கள் உண்டு. பெருமையுடன்…இதோ உங்கள் முன்னால்….நம் கடவுள்!!

தொகுப்பாளர்
: வணக்கம் கடவுளே; உங்கள இன்னிக்கி பேட்டி காணரதுல பெரும் மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி!

கடவுள்: (ஒரு சிறு புன்னகை)

தொகுப்பாளர்
: நேரடியா கேள்விகளுக்கு போகலாம்… மனிதர்கள நீங்க தான் படைச்சேங்கன்னு மத நூல்கள்ள கூறப்படுது; குரான்ல நீங்க ரெண்டு களி மண் பொம்மைகள செஞ்சு உயிர் கொடுத்ததாகவும் பைபிள்ல முதல ஆதாம் எவாழ படைச்சேங்கன்னும் வெவ்வேறு கருத்துக்கள் கூற பட்டிருக்கு. ஆனா திரு.சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி தான் மனிதன் உருவாக காரணம் என்று சொல்றாரு. உங்க கருத்து?

கடவுள்
: தம்பி.. இந்த டார்வின்… ஒரு சோதா பையன்….கடைசி காலத்துல கிருஷ்ணா ராமா கோவிந்தா இல்லே இயேசு மேரி மாதானு சொல்லிட்டு திரியாம என்ன வம்புக்கு தேவை இல்லாம இழுத்துக்கிட்டு இருந்தான். பூமிக்கு வந்தாச்சு அப்பறம் எப்படி வந்தோம்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பயன் சொல்லுங்க. மக்களுக்கு என்ன தோணுதோ அத நினைக்கறதுல என்ன தப்புன்னு நான் கேக்கறேன். ஐயோ.. இப்ப கூட அந்த டார்வின் பையன நினைச்சா துண்டு துண்டா வெட்டி போடணும் போல இருக்கு.

தொகுப்பாளர்: ஆனா கடவுளே நீங்க கருணையே வடிவானவர்னு மக்கள் நம்பறாங்க. நீங்க என்னடானா வெட்டனும் குத்தனும்னு பேசறீங்க…

கடவுள்: இது தான் நிதர்சனம் தம்பி…இந்த மக்கள பாத்தா சிரிப்பு தான் வருது… இவங்களே என்ன ஒரு பக்கம் சாந்த சொரூபி, தப்ப மன்னித்து நல்வழி நடத்தும் ஆசான்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் தப்பு செஞ்சவங்கள வதம் செய்பவன்னு சொல்றாங்க. என்னுடைய ரோல் என்னனு எனக்கே கொழப்பமா இருக்கு (ஒரு நக்கலான புன்னகையுடன்)

தொகுப்பாளர்: (திரு திருவென விழித்த படி) உங்க ஒரு நாள் சாதரணமா எப்படி இருக்கும்? மசூதிலியும் தேவாலயத்திலும் கோவில்லயும் தினமும் ஆயிரக்கணக்குல வேண்டுதல் வருமே…

கடவுள்: நக்கல் தானே தம்பி…10 நாள் தொடர்ந்து உக்காந்தா கூட இவங்க கொறைகள கேட்டு மாளாது…அப்பறம் தானே தீர்வு காண நேரமெல்லாம்…நான் பாத்த வரைக்கும் ஒரு 10 நாள் 20 நாள் ஒரே வேண்டுதல வைப்பாங்க…எதுவும் நடக்கலன்னு தெரிஞ்ச உடனே அதுதான் தலையெழுத்துனு வேற வேலைய பாக்க கேளம்பீடுவாங்க. உங்க சூப்பர் ஸ்டார் கூட ஒன்னு சொல்லுவாரே, ” கடவுள் சோதிப்பார் கை விட மாட்டாருன்னு”…விவரமான ஆளு தம்பி அவரு….ஒரு மாசத்துல இல்ல ஒரு வருஷத்துல கை கொடுப்பேன்னு சொல்லலே. இது மாதிரி புண்ணியவான்கள் இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை சொல்லுங்க (ஒரு பெருமிதம் கலந்த புன்னகையுடன்)

தொகுப்பாளர்
: (கனவா நனவா என்ற குழப்பத்தில்) கைக்கூப்பி வழிபடரவங்களுக்கே இந்த கதினா உங்கள வணங்க நேரம் இல்லாம இன்னிக்கி உயிர் பொழைச்சா போதுமுன்னு இருப்பவங்க கதி…

கடவுள்
: அது வந்து தம்பி…

தொகுப்பாளர்
: (கோபம் கலந்த விரக்தியுடன்) இல்ல ஐயா….அப்ப ஈழ தமிழர்கள் சொமாலிய நாட்டு மக்கள் இன்னும் தினம் தினம் பசி கொடுமைக்கு இரையாகும் மக்களின் கதி…உங்க கடைக்கண் பார்வை அவங்க மேல படவே இன்னும் பல 100 வருஷம் ஆகும் போலவே….அதுக்குள்ள அவங்களும் அவங்க சந்ததிகளும் கூட அழிஞ்சிடுமே!!

கடவுள்: உன் கோவம் எனக்கு புரியுது தம்பி…ரொம்ப நியாயமானதுதான்…விதின்னு ஒன்னு இருக்கும் போது அத யாரால மாத்த முடியும்.

தொகுப்பாளர்: இதெல்லாம் ரொம்ப அநியாயமா எனக்கு படுதுயா…விதின்னு ஒன்னு இருக்கானு எனக்கு தெரியல….ஆனா அதையும் மீறி அவங்களுக்கு ஒரு நல் வழி காட்டுவீங்கன்னு தானே….அலகு குத்தறது தீமிதிக்கறது மைல் கணக்குல உங்கள பாக்க நடந்து வர்றது எல்லாம்…அதெல்லாம்…?

கடவுள்
: பாரு தம்பி…ரொம்ப பேசற நீ….வாரத்துல ஒரு நாள் விடாம ஏதாவது ஒரு மதத்துல ஏதாவது ஒரு உருவத்துல எனக்கு பூஜை, யாகம், விரதம்..கண் மூடி திறக்கறதுக்குள்ள ராத்திரி ஆகுது…அப்பறம் அர்த்தசாம பூஜை…அப்பறம் வருஷா வருஷம் 1008 ஊர்வலம், கல்யாணம்னு தொவைச்சு புழிஞ்சு எடுக்கறாங்க…. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்… நீ…

தொகுப்பாளர்: சாமி அங்கயே நிறுத்துங்க…..இது முதல்வன் படபிடிப்பும் இல்ல… நான் அர்ஜுனும் இல்ல…கடசியா என்னதான் சொல்றீங்க?

கடவுள்: எல்லாமே விதி படி தான் நடக்கும்…அஹம் பிரம்மாஸ்மி!!

தொகுப்பாளர்: அது சரி…எனக்கு இதுக்கு மேல கேக்க ஒன்னும் இல்ல கடவுளே…எங்க நிகழ்ச்சில இன்னும் 2 விஷயங்கள் இருக்கு…நேர்க்காணல மையமா வச்சு, வந்த விருந்தினருக்கு ஒரு பட்டம் கொடுப்போம்..நம்ம கலந்துரையாடல கேட்டு கொண்டிருந்த நீதிபதி குழுவின் தீர்ப்பு இதோ….

நீதிபதி குழு தலைவர்: ஐய்யா இன்னிக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட ஒரு திருப்திகரமான பதில் நீங்க அளிக்காததுனால….உங்களுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் வழங்கறோம்!

கடவுள்: (சிரிப்பும் கோபமும் கலந்து) என்ன வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே.. இதெல்லாம் மக்கள் கேட்டாங்கனா கொதிச்சு எழுவாங்க… உங்க டிவி சேனல் அப்பறம் அதோகதி தான்!

தொகுப்பாளர்: நீதிபதி குழுவிற்கு நன்றி! உங்க வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா! உங்க அனுமதியோட….”டேய் உதவாக்கரை…கெளம்பு காத்து வரட்டும்”…இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர இதோ நம் அட்வைஸ் ஆறுமுகம்!!

அட்வைஸ் ஆறுமுகம்: இன்ன கண்ணு…எப்படி கீரே? உதவாக்கரைன்னு படா ஜோரா பேரு வச்சாங்கப்பா! இந்த கேப்மாறிய குஷி படுத்த என் பொண்சாதி அடிச்ச லூட்டி இருக்கே…பேஜாரா பூச்சு பா! எங்க பக்கத்து ஊட்டு ஆயா சொல்லும்…விதிய மதியால டேர் டேரா கிழிக்கலாம்னு.. இந்த டுபாகூர நம்பறத விட்டு புட்டு….தப்புன்னு தோணுதா அப்பீட்டு…கரீக்ட்னு தோணுதா ரிபீட்டு…நான் இப்ப எஸ்ஆய்க்கிறேன்…இன்னமா வர்ட்டா!!