Archive for the ‘சிறுகதை’ Category

h1

சாக்கடை

August 11, 2010

“ஆறுமுகம் திரும்பவும் சொல்றேன், பொண்ணு காலேஜ்க்கு போறதுக்குள்ள இளநிய வெட்டு. அது குடிக்காம போச்சு, உன் பொண்சாதி பிரசவ செலவுக்கு கொடுக்கறேன்னு சொன்ன காச மறந்துடு. இவ 4 மணி நேரமா சமையல்கட்டுல என்னதான் வெட்டி முரிப்பாளோ…பொண்ணுக்கு சாப்பாடு தயாராடீ?”, என கண்ணில் பட்டவரை டாம்பீகமாக மிரட்டிக்கொண்டிருந்தான் ரத்தினம்.
“ஏன்டீ…”, என மீண்டும் தொடங்க…
“இத பாருங்க…ஊர் உலகத்துல எல்லாப் புள்ளைங்களும் தான் காலேஜ்க்கு போகுதுங்க. இப்படி நீங்க தினமும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தேவையில்ல. தமிழ் குளிச்சு வரும் போது எல்லாம் தயாரா இருக்கும்”, என கணவனின் வெட்டி பேச்சை நிறுத்தினாள் காமாட்சி.
“இளநீ வெட்டிட்டேன்மா “, என ஆறுமுகம் சமையலறை வெளியே நின்று அறிவித்தான்.
“நீ தப்பா நினைக்காதே ஆறுமுகம். உன் அப்பார கேட்டா சொல்லுவாரு. கல்யாணமாகி ஆறு வருஷம் கழிச்சுதான் தமிழ் பொறந்துச்சு. அவருக்கு அந்த பொண்ணு மேல அவ்வளவு பிரியம். ஒரு தடவை கொழம்புல கொஞ்சம் காரம் தூக்கலா இருந்தது. தமிழ் எதேச்சையா தண்ணி கேக்க, உன் கொழம்பு சாப்பிட்டு தான் தண்ணி கேக்கறான்னு கூச்சல் போட்டு என்ன வெட்டவே வந்துட்டாருனா பாத்துக்கோ”, என ஆறுமுகத்திற்கு ஆறுதல் தெரிவித்தாள் காமாட்சி.
“காமாட்சி பொண்ணு வந்துட்டா பாரு. சாப்பாடு தயாரா..? ஏன்மா அந்த பக்கம் தான் நானும் போறேன். வழில வேணும்னா இறங்கிக்கிரியா?”, என முதல் வரியின் அவசரமும் ஆவேசமும் இரண்டாம் வரியில் சற்றும் தெரியாதபடி தமிழரசியிடம் வினவினான் ரத்தினம்.
“இல்லப்பா கமலாவோட போறேன். ரெண்டு பேரும் வாய்க்கால் வழியா பொடி நடையா நடந்து போயிடுவோம்”, என அமைதியாய் பதிலளித்தாள் தமிழரசி.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு,

“சரிப்பா நான் கெளம்பறேன்…போயிட்டு வரேன்மா. வரேன் அண்ணே”, என விடைப்பெற்றபடி கல்லூரிக்கு புறப்பட்டாள் தமிழரசி.
“சரிம்மா சாக்கிரதையா போயிட்டு வா”, என மகளை வழி அனுப்பிவிட்டு, “பாத்தியாலே…எங்க வம்சத்துக்கு கிடைச்ச மாணிக்கம்லே..சாதிக்காரன் ஒவ்வொருத்தன் வவுறும் பத்திக்கிட்டு எரியும்லே…அவன் அவன் போட்டி போட்டுக்கிட்டு பையங்கள டாக்டர்க்கு படிக்க வக்கிறான் கலெக்டர் ஆக்கணும்னு சொல்றான்… எதுக்குன்னு நினைக்கற…எல்லாம் என் பொண்ணுக்கு கட்டிகொடுக்கலே”, என ஆறுமுகத்திடம் தன் மகளின் பெருமையை பேசி பூரிப்படைந்தான் ரத்தினம்.

வாய்க்கால் அருகே…

“பாலையென வெறுமையாய் இருந்த நிலத்தை
அரை நொடியில் முல்லையென மாற்றிவிட்டாய்;
குறிஞ்சியின் இரு சிகரங்களை மார்பிலும்
நெய்தலை இதழ்களினுள்ளும் சுமந்தபடி
அமைதியாய் நின்ற இந்த மருதநாயகனை சுக்கு நூறாக்கி விட்டாய்”,
என தமிழரசியை கவிதையுடன் வரவேற்றான் கருணாகரன்.
“ஒரு நாள் இல்ல ஒரு நாள்…வாங்கின கவிதைக்கு கொடுக்க வேண்டிய பாக்கி எங்க தம்பின்னு கேட்டு வந்து நிக்கப்போறாங்க, அன்னிக்கி இருக்கு உனக்கு”, என கேலி செய்தாள் தமிழரசி.
“அய்யகோ…கருணா…உன் தமிழ் புலமை மீதே சந்தேகமா? இதைத்தீர்க்க வேண்டுமெனில் ஒன்று ஆழ்கடலில் மூழ்கி எழ வேண்டும் அல்லது மலை உச்சியிலிருந்து குதித்தெழவேண்டும். அனுமதி உண்டா அரசி?”, என தமிழரசியை சீண்டினான் கருணா.
“போதும் நிறுத்து கருணா.. என்ன யோசிச்சிருக்க? உனக்கு தெரிஞ்ச பசங்க கடைசி நேரத்துல காலவாரமாட்டங்களே? வீடு பாத்துட்டியா?”, என சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள் தமிழரசி.
“நான் இருக்கும் போது பயம் உன்னைவிட்டு ஒரு 100 அடி தூரம் தள்ளி நிக்க வேணாம்? கவலைபடாதமா.. நான் பாத்துக்கறேன். பசங்க ஒரு வீடு சொல்லி வச்சிருக்காங்க. ரெண்டு நாள்ல தகவல் வரும்”, என தமிழரசியை தன் மார்பில் சாய்த்தபடி தட்டிக்கொடுத்தான் கருணா.
“எனக்கு உங்க வீட்ட நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு…உங்க அப்பா…என்ன ஒரு 6 அடி இருப்பாரா? அவரும் அவர் மீசையும்…என்ன தேர்ந்தேடுதத்துல அவருக்கு சவர செலவு மிச்சம்…ரெண்டு நாள் எங்க அப்பாருகிட்ட பழகிட்டு வந்தா மாப்பிள்ளையும் நானே நாவிதனும் நானே”, என சிரிப்பினை அடக்கிய படி தமிழரசியை பார்த்தான் கருணா.
“நீ இப்பிடியே என் அப்பாவ வம்புக்கு இழுத்துட்டு இரு. அவரோட பழகினாத்தான் அவர் நல்ல மனசு உனக்கு புரியும். எனக்கு பிடிச்சதெல்லாம் அவருக்கும் பிடிக்கும்”, என தந்தையின் புராணம் பாடத் துவங்கினாள் தமிழ்.
கருணா சிண்டுவதும் தமிழ் சினுங்குவதுமாய் 2 மணி நேரம் கடந்த பின்னரே கமலா என்ற பேதை தனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பாள் என நினைவுக்கு வந்தது தமிழரசிக்கு.

சில நாட்களுக்கு பிறகு…

“இது…ரொம்ப நாளா இந்த மாடு இங்க காணோமே..உழுதுட்டு இருந்துச்சா?” என ஆறுமுகத்திடம் கேட்டான் ரத்தினம்.
“இல்லையா..நான் இங்க இல்லாதப்ப சண்முகம் சரியா கட்டி வைக்கல போல..அது அவுத்துக்குட்டு ஓடிருச்சு. நானும் தேடாத இடம் பாக்கி இல்ல…இன்னிக்கி குட்டிசுவத்துக்கு பக்கத்துல மேஞ்சுக்கிட்டு இருந்தது…அதுதான் இழுத்துட்டு வந்தேன்”, என்றான் ஆறுமுகம்.
“ஏலே அறிவில்ல…சோறு தான திங்கற, அதுதான் வீட்டுல போடற நல்லத திங்காம ஊர்மேய போச்சுனா…இவன் அத இழுத்துக்கிட்டு வந்தானாம். நாளைக்கு சந்தைல விக்கும் போது ஊருமேஞ்ச மாடுன்னு சொல்லி எவனும் வாங்கமாட்டான். அப்பறம் என் கௌரதை என்னாகுது. பாத்த இடத்திலியே அத வெட்டி போட்டிருந்தா..”, எனக்கூறி முடிப்பதற்குள் கூரையின் நடுவே இருந்த அரிவாள் ரத்தினத்திற்கு தென்பட்டது.
“அத எடுத்துட்டு வாலே… என் கண் முன்னாடியே இந்த சனியன கண்டம் துண்டமா வெட்டுலே…வீட்டுல பொத்தி பொத்தி வளத்தா தலைகணம் புடிச்சு ஊர்மேய போகுதோ! அந்த தலைய சீவிடுலே… தவிடும் புண்ணாக்கும் போட்டா…சுவத்தொட்டியும் ரோட்டுல கடக்கற புல்லும் எனக்கு போதும்னு போன அந்த கால வெட்டுல.. என் வீட்டு சோத்த தின்னுட்டு ஊர்மேய போச்சுன்னு சொன்னா, என் சாதி மருவாதை என்ன ஆகும்.. நாலு பேர் அப்பறம் என்ன எப்படி மதிப்பாங்க”, எனத் தன் சாதி வெறியினை வெளிச்சம் போட்டு காட்டினான் ரத்தினம்.
“என்னங்க..ஐய்யர வரச்சொல்லி இருந்தீகளாம். வந்திருக்காரு”, என குறுக்கிட்டாள் காமாட்சி, கண்களை துடைத்தபடி.
“இதோ வரேன்னு சொல்லு…நீ எதுக்குடீ கண்ண கசக்கிட்டு நிக்கற? எனக்கு மட்டும் என்ன ஆசையா..பெத்த பொண்ணுக்கு காரியம் செய்யனும்னு… நாய சிங்காரிச்சு நடு வீட்ல வச்சாலும் வாலாட்டிகிட்டு பீ தின்னத்தான் போகும். அது அப்ப எனக்கு தெரியாம போச்சு”, என அலுத்துக்கொண்டான் ரத்தினம்.
அரிவாள் காளை மாட்டின் கழுத்தினை பதம்பார்க்க, இரத்தம் ஊற்றெடுக்க, ஓரிரு துளிகள் ரத்தினத்தின் சட்டை மீது தெரித்தது.
அதை கழற்றிவிட்டு, “இத சுத்தம் செஞ்சுடுலே”, என ஆறுமுகத்திடம் கூறிய படி வீட்டினுள் நுழைந்தான்.

h1

கண்ணாடி வீடுகள்

March 17, 2010

“அம்மா …அவங்க யாருனே எனக்கு தெரியாது …நீ மட்டும் போயேன் ”, என முனகிய படியே படுக்கையை விட்டு இறங்கினாள் நளினி.

“பேசாம கிளம்பு …இப்படி விசேஷங்களுக்கு எல்லாம் போனா தான் …நம்ம வீட்லயும் பொண்ணு இருக்குனு நாலு பேருக்கு தெரியும் ”, என கேவலமான ஒரு விளக்கம் அளித்தாள் விசாலாட்சி .. சந்தேகமே வேண்டாம் நளினியின் தாயே தான் .

“இதெல்லாம் சரியே இல்லே மா …சீவி சிங்காரிச்ச மாட்ட சந்தைலே விலை பேசறா மாதிரி இருக்கு நீ சொல்றது ”, என அலுத்துக் கொண்டாள் நளினி.

“போயிட்டு தான் வாயேன் டி …சும்மா வீட்டுலே TV முன்னாடி உக்கார போறே”, என விசாலாட்சியின் கணவரும் குரல் எழுப்ப …இனி நம் சினுங்கல்கள் வேலைக்கு ஆகாது என முடிவு செய்தாள் நளினி.

“ஏதோ நல்ல reception சாப்பாடு உண்டு…அதுக்காக வேணும்னா போகலாம் ; அம்மாவின் கூச்சலுக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அந்த இன்னிசை மழை எவ்வளவோ பரவாயில்லை”, என வேறு வழி இல்லாமல் தன்னை தேற்றி கொண்டாள் நளினி. .

பன்னீர் மணம் வீச ரோஜா இதழ்களும் , கற்கண்டும் வரவேற்க திருமண மண்டபத்தினுள் நுழைந்தனர் .

விசாலாட்சியை கண்ட உடன் நாலைந்து பேர் ஓடோடி வந்தனர் .

“வருவியான்னு சந்தேகம் இருந்தது ..பரவாயில்லை கரெக்டா வந்துட்டே …இது யாரு நளினி தானே …பாத்து ஒரு 3 வருஷம் இருக்கும் …என்ன பண்றே மா ..”, என ஒரே மூச்சில் பேசி முடித்தாள் ஒரு அம்மையார். அம்மாவின் தோழி என சட்டென புரிந்து கொண்டாள் நளினி.

“நான் …” என விடை அளிக்க வாயை திறந்தாள் நளினி …அதற்குள் விசாலாட்சியும் அவர் தோழிகளும் நகை புடவை பற்றிய உரையாடலில் இறங்கி விட்டனர் . “அதுதான …அம்மாவின் தோழி ஆச்சே … நாம பேசறத எங்க கேக்க போறாங்க ; அமைதியா இருப்பது தான் சரி ”, என தீர்மானித்த படி சமையலறை பக்கம் திரும்பினாள் நளினி.

“ஏன்டி நல்ல வசதியான குடும்பம் தான ….ஏன் இப்படி ஒரு பொண்ண பாத்திருக்காங்க , தொட்டு கண்ணுல மை வச்சுக்கலாம் போல …”, விசாலாட்சியின் தோழிகளில் ஒருத்தி.

“மெதுவா பேசு டி …யாருக்காவது கேட்டுற போகுது …நல்ல வரதட்சனை கொடுத்திருப்பான் பொண்ணோட அப்பன் …அதுதான் இப்படி ஒரு பையன மடக்கி போட்டுட்டாங்க”…இது விசாலாட்சி .

“இந்த பொண்ண பாத்தா ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ சுஹாசினி மாதிரி இல்லே …?” என ஒருத்தி கேட்க… “சுஹாசினி கொஞ்சம் கலரா இருந்தான்னு நினைக்கறேன் ”, என்று இன்னொருத்தி குரல் எழுப்ப அந்த வட்ட மேசை மாநாட்டில் சிரிப்பொலி அடங்க நிமிடங்கள் 5 ஆகி இருக்கும் .

குளிர் பான பெட்டியின் இதமான காற்று நளினியின் மனப்புழுக்கத்தை இன்னும் தூண்டி விடுவது போல் இருந்தது . “அம்மா …ஏன் இப்படி ”…என பேச ஆரம்பித்த நளினியின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

“கோடி கோடியா பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு கேவலமான பொண்ண என் பையனுக்கு …மாட்டவே மாட்டேன் ”, என நளினியின் தாய் சூளுரைத்தாள்.

“ஆமாம் கேக்க மறந்துட்டேன் …பையன் ஆஸ்திரேலியால இருக்கானே …அங்க ஏதோ நிற வெறி பிரச்சனை எல்லாம் ரொம்ப அதிகமாகி இருக்காமே …என்ன சொல்றான் ”, என ஒரு நலன் விரும்பி கேள்வி எழுப்பினாள்.

“அவன் இருக்கும் இடத்துல ஒன்னும் பிரச்சனை இல்லியாம் ….நான் கூட திரும்பி வந்துடுன்னு தான் சொல்றேன் …எங்க கேக்கறான் . அவனுக்கு அந்த lifestyle தான் பிடிச்சிருக்காம்.

News எல்லாம் பாக்கும் போது தான் வெளிநாடுகள்ல இருக்கற நிற வெறி பத்தி எல்லாம் தெரிய வருது …அப்படி என்ன வெறுப்போ நம்ம தோல பாத்தா …”, என அலுத்து கொண்டாள் விசாலாட்சி .

ஒரு நிமிடம் நளினி நடப்பது புரியாமல் திடுக்கிட்டு நின்றாள்.

வெட்கம் கலந்த புன்னகையுடன் மேடையில் நின்ற மணப்பெண்ணை பார்த்தாள். சில நிமிடங்களுக்கு முன் அவள் சரமாரியான நிற வெறி தாக்குதலுக்கு உள்ளானதை நினைத்தாள்…கொதித்தாள்…சட்டென எட்டி பார்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

h1

கானல் நீர்

October 9, 2009

“அம்மா காபி”, என்று தனக்கே உரிய தோரணையில் சுமித்ரா முறையிட, சற்றே நிலை தடுமாறிய மீனா, சமையலறையிலிருந்து படுக்கை அறைக்கு விரைந்தாள்.
“நேத்து போதை உனக்கு தலைக்கு மேல ஏறிடுச்சு; இங்கயே தூங்கட்டும்னு நான்தான்…”, என சுமித்ராவின் ‘நான் எங்கே இருக்கேன்’ என்ற குழப்பத்திற்கு விடையளித்தாள் மீனா.
“போச்சுடா பொண்ண காணோம்னு மேலும் கீழும் குதிப்பாளே விசாலாட்சி”, என்று கூறிக்கொண்டே வாசலுக்கு விரைந்தாள் சுமித்ரா.
“சாப்பிட்டு போலாமே.. நான் வேணும்னா…”, என்ற மீனாவின் வாரத்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கானது.

9:00 மணிக்கு முதல் வகுப்பு என்று தெரிந்திருந்தும் ஆடி அசைந்து 11:00 மணிக்கு வகுப்பினுள் நுழைந்தாள் சுமித்ரா.
“என்னடி திருமதி. பழனிசாமி class தான…எங்க ஆள காணோம்”, என நக்கலாய் சுமித்ரா விசாரிக்க,
“அவ புருஷன் துபாய்ல இருந்து வரானாம்…வரவேற்க போய் இருக்கா; செரி நீ சொல்லு, நேத்து செம மப்பு போல…உங்க அம்மாவ காலைல கோயில்ல பாத்தேன்…பொண்ண கொஞ்சம் திருத்துங்கன்னு சொல்லி இருக்கணும்”, என சுமித்ராவை கிண்டல் செய்தாள் நந்தினி.
“அம்மா தாயே அதெல்லாம் எதுவும் செஞ்சுடாதே; ஊருல இருக்கற மாமா, சித்தப்பா எல்லாரையும் கூப்பிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
‘பெண் விடுதலை’ பத்தி பேசினா…என்னிக்கு வெளியாகுது, யாரு நடிச்சிருக்காங்கன்னு கேக்கறாங்க.
இந்த society என்னிக்கு ஒரு பொண்ணும் தண்ணி அடிக்கலாம், பசங்கள மாதிரி துணி போடலாம், வேலைக்கு போறது, கார் ஓட்டறது எதுவானாலும் ஒரு ஆணுக்கு குறைஞ்சவ இல்லேன்னு உணருதோ… அன்னிக்கித்தான் பெண் விடுதலை சாத்தியமாகும்”, என உணர்ச்சி ததும்ப தன் ‘பரிதாப நிலை’யை விளக்கினாள் சுமித்ரா.
“நீ இப்படியே பேசு…ஒரு நாள் பாருங்கடி…இவ ‘மகளிர் முன்னேற்ற கழகம்’ ஒன்னு ஆரம்பிச்சு ‘பீர் பாட்டில்’ சின்னத்துக்கு வாக்களிக்க சொல்ல போறா”, என கேலி செய்தாள் கலா.
“என்ன தப்புன்னு கேக்கறேன்… கொஞ்சம் modern ஆ துணிபோட்டா, முடிய வெட்டினா உருப்படாதுன்னு ஏசறாங்க; வண்டி ஓட்டினா ‘தெனாவட்டு புடிச்ச கழுதை’னு ஒரு பட்டம். இவங்களோட இந்த கண்ணோட்டம் change ஆற வரைக்கும்… நாம அடிமைகளாவே இருப்போம்”, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தாள் சுமித்ரா;
“என் செல்வ செழிப்பை ஊருக்கு தெரியப்படுத்தும் போது நீ குறுக்கிட்டால்…என்னை அடிமை படுத்துகிறாய்; உன் வேலையை கவனி”, என்ற தன் சுயநல கருத்திருக்கு சில பல உதாரணங்களினால் சாயம் பூசி வெளிப்படுத்தினாள்.
“உன் கட்சி வெற்றி பெற எங்கள் நல் வாழ்த்துக்கள்; எனக்கு பசி உயிர் போகுது; யார் வரீங்க canteen க்கு”, என கலா கூற…கலைந்தது பொதுக்கூட்டம்.

6 வருடங்களுக்கு பிறகு
“எவ்வளவு ஆச்சு”, என credit card ஐ நீட்டினாள் சுமித்ரா.
“நீங்க…சுமித்ரா தானே…கே.எம். கல்லூரில படிச்சீங்களா”, என யாரோ பின்னால் இருந்து வினவ, திரும்பினாள் சுமித்ரா.
“ஆமாம் நீங்கே…ஏய் கலா எப்படி இருக்கே. நீ எங்க இங்க. பெங்களூர்லே செட்டில் ஆயிட்டன்னு கேள்விப்பட்டேன்”, என பேச ஆள் கிடைத்த மகிழ்ச்சியை சரமாரியான கேள்விகளால் வெளிப்படுத்தினாள் சுமித்ரா.
“என் கணவருக்கு இடமாத்தம் ஆயிடுச்சு. அதுதான்; இங்க பெசன்ட் நகர்ல தான் இருக்கேன்”, என்றாள் கலா.
தோழிகளின் திருமணங்கள், குழந்தைகள், விவாகரத்துகள் அனைத்தையும் பேசி முடிப்பதற்குள் கடை மூடும் நேரமானது.
“வீட்டுக்கு வர…காபி சாபிட்டுக்கிட்டே பேசறோம்”, என அன்பு கட்டளையிட்டாள் சுமித்ரா.
“நீ மாறவே இல்லே டி…ஆனா ரொம்ப நேரம் இருக்க முடியாது”, என கலா கூற, இருவரும் வெளியில் நின்றிருந்த சுமித்ராவின் toyota car ஐ நோக்கி நடந்தனர்.
“காபி பிரமாதம் சுமி… உன் கணவர் எப்ப வருவாரு…ஒரு வணக்கம் போட்டுட்டு போகலாம்னா…”, என கலா கூறி முடிப்பதற்குள்,
“ஏன்டீ சுமி…எவ்வளவு தடவை இந்த ‘door mat’ அ தூசி தட்ட சொல்றேன்..ஒன்னு சொன்னா உடனே செய்ய உடம்பு வணங்கினாத்தானே. இன்னிக்கி திரும்பவும் தோசை வரட்டி மாதிரி இருந்தது..குழம்புல உப்பே சுத்தமா இல்ல. உன்ன என் தலைல கட்டின அந்த நடராசன சொல்லணும்”, என தன் வருகையையை அறிவித்தான் சேகர்.
“ஏய் சுமி…என்ன பதிலே..”, என பேசிக்கொண்டே வந்த சேகர், கலாவை பார்த்த உடன் அசடு வழிந்தான்; செய்கையினால் ஒரு hello சொன்னான்.
“இந்த சனி-ஞாயிறு பண்ணலாம்னு இருந்தேங்க”, என சேகருக்கு பதில் அளித்துவிட்டு, “கொஞ்ச நேரம் இரு கலா…வீட்ல பண்ணினேன்…சாப்பிட்டு பாரு”, என தோழியை கேசரியுடன் உபசரித்தாள் சுமித்ரா.
“கேக்கறேன்னு தப்பா நினைக்காதே, உன் கணவர் வீட்டு வேலைல help பண்ண மாட்டாரா”, என கலா கேட்டாள்.
“அத ஏன் கேக்கற…நிறைய தடவை சொல்லி பாத்துட்டேன்; office க்கு போயிட்டு வந்து, குழந்தை படிப்ப கவனிச்சு, வீட்டு வேலைய செஞ்சு முடிக்கறதுக்குள்ள… பதினொன்னு-பன்னிரண்டு மணி ஆயிடுது. கொஞ்சம் கோபமா பேசினா…divorce வாங்கிக்கோ, அம்மா வீட்டுக்கு போயிடுனு சொல்றாரு. என்ன பண்ண…வீட்டுக்கு வீடு வாசப்படினு adjust பண்ண வேண்டியதுதான்; infact வேலைய கூட விட்டுடலாமானு பாக்கறேன்”, என அலுத்துக்கொண்டாள் சுமித்ரா.
“பெண் விடுதலை பத்தி…” என ஆரம்பிக்க நினைத்து “நமக்கேன் வம்பு”, என்று அமைதியாய் கேசரியில் முந்திரி வேட்டையை தொடர்ந்தாள் கலா.

“பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?”
—-வினவு இணைய தளத்தில் ‘வாழத்துடிக்கும் பெண்ணினனம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!’ என்ற இடுகையில் இடம்பெற்றுள்ள இவ்வரிகளின் தாக்கமே….கானல் நீர்!

h1

பச்சோந்தி

August 1, 2009

“ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே கேட்டுக்கோங்க. அப்புறம் அய்யோ  அம்மானா நான் பொறுப்பில்ல”, என்று கூறியபடி தன் வாராந்திர அணி கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தான் சுந்தரம். அணி தலைவன்-அணி உறுப்பினர் என்ற பாகுபாடில்லாமல் சுந்தரம் நடந்து கொள்ளும் விதம், அவன் அணியின் ஒற்றுமைக்கு ஒரு மூல காரணம் என்றே சொல்லலாம்.
“நிச்சயம் அடுத்த குழு தலைவர் சுந்தரம் தான்”, என்ற குப்பன் சுப்பன் தீர்ப்புகள் கூட அலுவலகத்தில் கேட்ட வண்ணம் இருந்தது.
தன் இருக்கைக்கு செல்லும் வழியில் பெண் ஊழியர்களை நக்கல் அடித்த படியும் ஆண்களிடம் குறும்பு சேட்டை செய்த படியும், அவன் அணி பிரியத்தை காட்டினான்.
“ஹலோ சுந்தரம், காபி சாப்பிடலாம் வரீங்களா”, என தன் இருக்கையில் இருந்து குரல் எழுப்பினான் சேகர்.
“ஓ தாராளமா”, என சுந்தரம் கூற, இருவரும் கீழ் தளத்திலுள்ள ‘காபி டே’ விற்கு விரைந்தனர்.
“சுந்தரம், இது தினேஷ். என்னோட ஸ்கூல்ல படிச்சான். இங்க மூணாவது மாடில ‘கிராபிக்ஸ்’ல வேலை பாக்கிறான்”, என தன நண்பனை அறிமுகப்படுத்தினான் சேகர்.
பங்குச்சந்தையில் இருந்து பாகிஸ்தான்-இந்தியா மேட்ச் வரை, தேர்தல் நிலவரத்திலிருந்து தெனாவட்டு கதாநாயகி வரை, அனைத்தையும் அலசி முடித்த சமயத்தில், “ஆமாம் அந்த லவ் மேரேஜ் சங்கதி என்னாச்சு”, எனக் கேட்டான் சேகர்.
“எந்த லவ் மேரேஜ்?”, என கண்களால் வினவிய சுந்தரிடம், “இவங்க வீட்டு பக்கத்துலே வேற சாதி பொண்ண ஒருத்தன் லவ் பண்ணினானாம். திடுதிப்புனு கல்யாணமும் பண்ணிகிட்டாங்க.   ரெண்டு வீட்டாரும் செம டென்ஷன் ஆய்ட்டாங்க. பொன்னையும் பையனையும் வீட்ட விட்டு துரத்தீட்டாங்க”, என அலுத்துக்கொண்டான் சேகர்.
“என்ன கொடுமை சார் இது; சாதியாவது மதமாவது..அவன் அவன் அடுத்து மார்ஸ்ல பிளாட் வாங்கிபோடலாமா, கொல்லைபக்கதுல எண்ணெய் கிணறு வேட்டலாமானு யோசிக்கிறான்..நீங்க என்னடான்னா… எல்லாம் நம்ம மனசுல தான் இருக்கு சார். இப்படி சாதிவெறி புடிச்சு அலையறதுநாலதான் இந்தியா இன்னும் ‘வளரும்’ நாடா இருக்கு”, என வெறுப்பும் பொறுப்பும் கலந்த உணர்ச்சி ததும்ப பேசி முடித்தான் சுந்தரம்.
பேசிக்கொண்டிருந்ததில் 30 நிமிட இடைவேளை முடிந்ததை 45 வது நிமிடத்தில் உணர்ந்து, வெட்டி மேசை மாநாட்டில் இருந்து விடைப்பெற்றுக்கொண்டான் தினேஷ்.
“அது வந்து சுந்தரம்.. எங்க வீட்ல இன்னிக்கு சர்க்கரை பொங்கல் பண்ணினாங்க. நீங்க எடுத்துப்பீங்களானு சந்தேகத்துல offer பண்ணல. ஆனா நீங்க பேசியத கேட்டதுக்கு அப்பறம் ஒரு சின்ன தைரியம்”, என குழைந்தான் சேகர்.
“அட சக்கரை பொங்கலா..என் மனைவி லட்சுமிக்கு ரொம்ப பிடிக்குமே. கொடுங்க..வீட்டுக்கு கொண்டு போய் ஜமாய்ச்சிடுறோம்”, என ஆர்வத்துடன் பதிலளித்தான் சுந்தரம்.
மாலை 5:30
“என்னதுபா இது”, என கேட்டபடியே சுந்தரம் கொண்டுவந்த டப்பாவை கையில் எடுத்தான் ஹரி.
“டேய் அத வேற கையில தொட்டயா..போய் கைய அலம்பு”, என முகம் அலம்பிய படியே குளியலறையிலிருந்து அதற்றினான் சுந்தரம்.
“என்னனா…வந்ததும் வராததுமா ஏன் குழந்தைய கத்தறேள்”, என தன் பங்கிற்கு சமையலறையிலிருந்து சீறினாள் லட்சுமி.
“ஆபிசுல ஒரு சூத்திர பையன் கொடுத்தான் டீ. என்ன ஹைஜீன் கடைப்பிடிப்பாளோ தெரியல. அதை குப்பைல கொட்டீட்டு கைய நன்னா டெட்டால் போட்டு அலம்பு”, என்றான் சுந்தரம்.
“சூத்திர பையன்னா என்னப்பா”, என ஹரி தன் மழலையில் கேட்க…
“அதுவாடா கண்ணா…”, என அடுத்த தலைமுறைக்கும் பார்ப்பனீயத்தை பழக்க ஆயத்தமானான் சுந்தரம்.